Categories
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Sri Tyagaraja Svamigal) The Lost Melodies (TLM) Valajapettai Venkataraman Bhagavathar

கேதாரகௌள ப்ரியர்

இன்று மாசி மூலம். ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் அத்யந்த சிஷ்யரின் ஜன்ம தினம். நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஸ்வாமிகளிடம் மிக காலங்கள் பயின்ற சீடர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும். பரிபூரண குரு கடாக்ஷதைப்பெற்றவர். ஸ்வாமிகளின் ப்ரேமையை கை வரப்பெற்றவர்.

இந்த பீடிகையை மேற்கொண்டே இவர் யாரென்று யூகித்திருக்க முடியும். ஆம், வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் அவதார தினமே இன்று. பொதுவாக நான்கு, ஐந்து நாட்கள் கோலாஹலமாக நடைபெரும் இவரின் அவதார தின நிகழ்ச்சிகள் இந்த வருடம் ‘கொரோனா கிருமி’ தொற்றையொட்டி சுஷ்கமாக ஓரிரு நாட்களே நடைபெருகின்றன.

இவர் ஐயம்பேட்டை என்னும் ராமசந்த்ரபுரத்தில் பிறந்தாலும், வாலாஜாபேட்டையில் வாழ்ந்து ப்ரசித்தம் அடைந்தமையால், அவர் வாழ்ந்த ஊரின் பெயரே அவருக்கு அடை மொழியாக குறிக்கப்பெறுகிறது.

இவரும், இவரின் குமாரருமான ஸ்ரீ க்ருஷ்ணஸ்வாமி பாகவதரும் ஆற்றிய பங்கு அளவிட முடியாதவை. அவர்கள் இருவரும் ஸ்வாமிகளிடமிருந்து கற்றுக்கொண்ட க்ருதிகளை ஸ்வாமிகளின் காலத்திலேயே சுவடியில் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது ஸ்வாமிகளின் பல கீர்தனங்களும் உரு தெரியாதபடி மாறியுள்ள ஸ்திதியில் இந்த சுவடிகளே மற்றம் என்னும் உபாதைக்கு அரு மருந்தாகவும், அம்ருதமாகவும் உள்ளன. என்ன ஒரு தீர்க தரிசனம்!!

ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஒரு சிறந்த கவியாகவும் இருந்துள்ளார். ஆனால், அவர் எழுதியுள்ள பாடல்களின் மொத்த தொகையோ, மற்ற தகவல்களோ நமக்கு கிடைக்கப்பெறவில்லை. கிடைத்த வரையில் சுமார் 100 உருப்படிகள் அச்சில் உள்ளது. அவருடைய சம காலத்தவர்களில், கீதம், க்ருதிகள், ஸ்வரஜதி, வர்ணம், தில்லானா என்று சகல வித இசை வடிவங்களையும் கையாண்டவர் இவர் மட்டுமே என்பது புலனாகிறது. இவரது பல உருப்படிகள் அச்சில் வராமலேயே உள்ளது.

The Lost Melodies, இன்னாருடைய அச்சில் வெளி வராத ஒரு கீதத்தையும், வர்ணத்தையும் வெளியிட்டுள்ளது. இது மேற்குறிப்பிட்ட சுவடியிலிருந்து எடுத்தனவாம். அந்த வர்ணத்தை இப்பொழுது ஆராய முற்படலாம்.

வடிவழகன், சுந்தரன், சர்வ லாவண்ய ஸ்வரூபன் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஸ்ரீ ராமசந்த்ரமூர்த்தி. அப்பேர்ப்பட்ட தர்மத்தின் மானுட ஸ்வரூபமான பரப்ரஹ்மத்தை பற்றிய வர்ணம் இது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் குருவும் சிஷ்யரும் ஒரே ரூபத்தை உபாசித்திருப்பது. இருவரும் ஸ்ரீ ராம உபாசகர்களாக திகழ்ந்துள்ளது எண்ணி, வியந்து, மகிழ வேண்டிய விஷயம்.

ராமசந்த்ரபுரத்தில் விளங்கும் ஸ்ரீ ராமசந்த்ரனை ‘இனவம்ஶாப்தி சந்த்ரா’ என்றே அவரின் குலத்தை குறிப்பிட்டு ஆரம்பிக்கும் வர்ணம். ‘குலத்தைப்போலே இருக்குமாம் குணம்’ என்பது சொலவடை. ஆகையில் ஒருவனுக்கு அவனுடைய குலம் மிகவும் முக்கியமாகும். நல்ல குலத்தில் உதித்தாலும் அந்த குலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமேயன்றி இழிவை சம்பாதித்து கொடுக்கக்கூடாது. இதை பின்பற்றியவர் ஸ்ரீ ராமபிரான். ஆகையில் அவருடைய குலமான ‘ரகு’ வம்ஶத்தைப்பற்றி பாடாத கவிகளே கெடையாது எனலாம். ஸ்வாமிகளின்  ‘தினமணி வம்ஶ’, ‘இதி சமயமுரா இனகுல திலக’ போன்ற கீர்த்தனைகள் ஸ்ரீ ராமனின் குலத்தை சேர்த்து குறித்துள்ள படைப்புகளாகும்.

‘இனவம்ஶாப்தி சந்த்ரா’  என்கிற இந்த வர்ணமானது கேதாரகௌள என்னும் ராகத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இவருடைய கீர்த்தனைகளை ஆராய்கையில், இந்த ராகம் இவருக்கு மனதுகந்த ராகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்த ராகத்தில் மட்டுமே வர்ணம், தில்லானா மற்றும் ஸ்வரஜதியை இவர் இயற்றியுள்ளார். இதில் கீர்தனமும், கீதமும் கூட இயற்றியிருக்கலாம்.

இந்த ராகத்தை இவர் கையாண்ட விதம் ரசித்து அனுபவிக்கத்தக்கது. இப்பொழுது ஒவ்வொரு ராகத்திற்க்கும் ஒரு வடிவினை கொடுத்து விட்டோம். அதனை தாண்டி ஒரு ப்ரயோகம் வந்தால் அதை ஏற்பது பெரும்பாலருக்கு கடினம். அதுவும் அந்த ராகதைப்போலவே இருக்கும் ஒத்த ராகங்களின் ப்ரயோகங்கள் வந்தால் கேட்கவே வேண்டாம். ஆனால், இவருடைய காலத்தில் அப்படியல்ல. ஒரு ராகம் என்பதை நிஷ்கள ஸ்வரூபமான பரப்ரஹ்மத்தை போன்று பாவிக்கப்பட்டுள்ளது. அந்த நிஷ்கள ரூபத்தினுடைய சகல சகள ஸ்வரூபத்தையும் காண்பிப்பதாக இருந்துள்ளது. இந்த சூக்ஷுமத்தைப் புரிந்து கொண்டாலே இந்த வர்ணத்தை அனுபவிக்க முடியும்.

சங்கீதத்தை தொடர்ந்து கேட்பவர்களுக்கு கேதாரகௌள மிகவும் ப்ரசித்தமான ராகம். அதனுடைய ஒத்த ராகங்களான நாரயணகௌள மற்றும் சுரடியும் பரிச்சயமே. ஒன்றிலுள்ள ப்ரயோகங்கள் மற்றொன்றில் வராமல் பாடுவதே சம்ப்ரதாயம். ஆனால், இந்த வர்ணத்தை கேட்கையில் சிலவிடங்களில் நாரயணகௌள கேட்கலாம். ஒரு சிலவிடங்களில் சுரடியும் ஒலிக்கலாம். ஆனால் அப்படி கேட்பதற்கு நமது மாயை என்கிற அறியாமையே காரணம்.

கேதாரகௌளயின் சகல ப்ரயோகங்களும் எனக்கு அதுப்படி என்று நினைத்து கேட்டால் அது நாரயணகௌளையாகவும் சுரடியாகவும் தான் ஒலிக்கும். ஆனால், கேதாரகௌள என்னும் நிஷ்கல ஸ்வரூபத்திற்கு இருக்கும் சகல சகள ஸ்வரூபத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது கேதாரகௌளத்தின் சகல பரிணாமங்களையும் காட்டும். இதைக் காண்பித்து கொடுத்தற்கு, நமது அறியாமை என்னும் மாயையை விலக்கியதிற்கு வேங்கடரமணருக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த ராகத்தில் அபூர்வ ப்ரயோகங்களை கையாண்டிருப்பது இந்த வர்ணத்தில் மட்டுமல்ல, ஸ்வரஜதியிலும் காணலாம். மேற்சொன்ன கருத்துக்களை புரிந்து கொண்டு இந்த வர்ணத்தையோ, ஸ்வரஜதியையோ கேட்கையில், இந்த ராகம் மட்டுமல்ல, இந்த ராகத்தைப்பற்றிய நம்முடைய புரிதலும் விரிவடைகிரது.

மீண்டும் மீண்டும் கேட்கையில், அது ஆகாசத்தைப்போன்று நிமிர்ந்து பார்த்து ப்ரமிக்க வேண்டிய ராகத்தை ஒரு பானைக்குள் இருக்கும் வெற்றிடத்தை குனிந்து பார்த்துகொண்டிருக்கிறோமே எங்கிற அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்கும் மேல் இவரின் ஞானத்தை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது. இப்படி எவ்வளவு பொக்கிஷங்களை இழந்திருக்கிறோமோ?

Leave a comment